Thursday 9 June 2011

ஆகஸ்டில் மூடப்படுகிறது என்டிடிவி - இந்து செய்திச் சேனல்?

சென்னை: சென்னையின் முக்கிய செய்திச் சேனல்களுள் ஒன்றான 'என்டிடிவி - இந்து' மூடுவிழாவுக்குத் தயாராகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த சேனல் நிறுத்தப்படும் அல்லது வேறு நிறுவனத்துக்கு விற்கப்படும் என உறுதியாக தெரிய வந்துள்ளது.

உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் நோக்கில் தமிழகத்தில் மிகவும் பலமாக விளங்கும் இந்து நாளிதழ் குழுமமும், தனியார் தொலைக்காட்சி நடத்துவதில் நிபுணத்துவம் மிகுந்த பிரணாய் ராயின் என்டிடிவி நிறுவனமும் இணைந்து 'என்டிடிவி - இந்து' செய்திச் சேனலை ஆரம்பித்தன.

உள்ளூர் செய்திகளை பெரிய அளவில் கவர் செய்வது இதன் நோக்கமாக இருந்தது. இந்த சேனலின் செயல்பாடு பரவாயில்லை எனும் அளவுக்கு இருந்தாலும், விளம்பர வருவாய் மிகக் குறைவாக இருந்ததால், தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த சேனலை முழுவதுமாக நிறுத்துவது அல்லது வேறு நிறுவனத்துக்கு விற்பது என்ற முடிவில் உறுதியாக உள்ளன இரு நிறுவனங்களும்.

இதுகுறித்து விசாரிக்கையில், இரு தரப்புமே கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. குறிப்பாக தி இந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர் என் ராம் கூறுகையில், இதுபற்றி என்டிடிவிதான் கருத்து கூறவேண்டும், என்றார்.

இந்து நாளிதழ் தரப்பில், பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறுகையில், "வரும் ஆகஸ்ட் வரைதான் இந்த சேனல் செயல்படும். பின்னர் மூடப்பட்டுவிடும். அதற்குள் யாரேனும் கேட்டாலும் விற்கத் தயார் என்று இருதரப்புமே முடிவு செய்து விட்டன," என்றார்.

No comments:

Post a Comment